Home நாடு “தினக்குரல்” நாளிதழில் செல்லியல் செய்தி மறுபிரசுரம்

“தினக்குரல்” நாளிதழில் செல்லியல் செய்தி மறுபிரசுரம்

1148
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 4 – மலேசியாவில் இணையம் மற்றும் செல்பேசி குறுஞ்செயலி (mobile app) தளங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் செல்லியல் இணையத் தளத்தின்  செய்திகளை அப்படியே அப்பட்டமாக நகலெடுத்து மலேசியாவில் அச்சு வடிவில் வெளிவரும் நாளிதழ்கள் அடிக்கடி பிரசுரித்து வருகின்றன.

சில சமயங்களில் இது செல்லியல் செய்தி என்பதைக் குறிக்கும் வண்ணம் செய்திகளுக்குக் கீழே ‘செல்லியல்’ எனக் குறிப்பிடுவார்கள். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவ்வாறு குறிப்பிடாமல் ஏதோ தங்களின் சொந்த தயாரிப்பு செய்தி என்பது போலப் போட்டுக் கொள்கின்றார்கள்.

இணையம், குறுஞ்செயலி வழி நாங்கள் வழங்கும் செய்திகள் அச்சு வடிவில் பத்திரிக்கைகளைப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்கும் போய்ச் சேருகின்றதே என்ற நல்லெண்ணத்தில் நாங்களும் இதனைப் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை.

#TamilSchoolmychoice

ஆனால், ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைப் பொறுப்பாளர்களை அழைத்து, இது நாங்கள் செல்லியலுக்கென பிரத்தியேகமாக தயாரித்த-எழுதிய செய்தி என்பதால், குறைந்த பட்சம் எங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று நட்பு அடிப்படையில் வேண்டுகோள் விடுத்து வந்திருக்கின்றோம்.

ஆனால், எங்களின் வேண்டுகோள் உதாசீனப்படுத்தப்படும்போது, அதை வாசகர்களுக்கு சுட்டிக் காட்ட வேண்டியது எங்களின் கடமையெனக் கருதுகின்றோம்.

உதாரணமாக, இன்றைய தினக்குரல் பத்திரிக்கையில் 10ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கீழே உள்ள செய்தியைப் பாருங்கள்:

Thinakural Malaysian movies

இந்த செய்தி நேற்றைய நமது செல்லியல் தளத்தில் கலையுலகம் பிரிவில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

எங்களின் ஆசிரியர் குழுவினர் ஒரு நாள் முழுக்க தேடியலைந்து சேகரித்த செய்தித் தொகுப்பு இது. ஆனால், இன்றைய தினக்குரல் பத்திரிக்கையில் இந்த செய்தி அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதிலும், எங்கும் இது செல்லியலின் செய்தி என்பது குறிப்பிடப்படவே இல்லை.

இந்த செய்தியின் இணைய வடிவத்தை செல்லியல் தளத்தில் கலையுலகம் பிரிவில் கீழ்க்காணும் இணையத் தொடர்பில் இப்போதும் வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

திரைக்குத் தயாராகி வரும் 6 புதிய மலேசியப் படங்கள்!

அந்த செய்தியின் முடிவில் எங்களின் துணை ஆசிரியர் பீனிக்ஸ்தாசன் தான் எழுதிய செய்தி என்பதைக் குறிக்கும் வண்ணம் தனது பெயரையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரது பெயரை மட்டும் நீக்கி விட்டு இந்த செய்தியை தங்களின் சொந்த செய்தி போல் மறுபிரசுரம் செய்திருக்கின்றார்கள் என்பதையும் வருத்தத்துடன் வாசகர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

முக்கிய குறிப்பு: செல்லியலில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் செல்லியலின் பதிப்புரிமை பெற்றதாகும். இதனை நகலெடுத்து வெளியிடுவதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்பதை இந்த தருணத்தில் வலியுறுத்த விரும்புகின்றோம்.

அவ்வாறு செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறாமல் மறு பிரசுரம் செய்வது மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடகச் சட்டத்திற்கும், பதிப்புரிமை சட்டங்களுக்கும் முரணானது என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம்.

-ஆசிரியர் குழுவினர்