அந்த வகையில், கூகுள் சமீபத்தில் வெளியிட்ட கூகுள் ஃபோட்டோஸ் செயலி, இன வெறியைத் தூண்டும் விதத்தில், கறுப்பினத்தைச் சேர்ந்தவரைக் ‘கொரில்லா’ என்று டேக் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
‘இமேஜ் ரிகக்னைசன்’ (Image Recognition) தொழில்நுட்பம் மூலம் செயல்படும் கூகுள் ஃபோட்டோஸ் செயலி, புகைப்படங்களை நுணுக்கமாக ஆய்ந்து( ஸ்கேன் செய்து) நமது இடங்கள் மற்றும் பின்புலங்களுக்குத் தகுந்தவாறு அவற்றை தானியங்கியாகவே தனித்தனி டேக்களில் வரிசைப்படுத்திவிடும்.
இந்தச் சேவையைச் சமீபத்தில் கறுப்பின அமெரிக்கரான ஜேக்கி அல்சைன் பயன்படுத்தி உள்ளார். தான் தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இந்தச் சேவையில் பதிவேற்றி உள்ளார். புகைப்படத்தை ஸ்கேன் செய்த கூகுள் ஃபோட்டோஸ், அவர்கள் இருவரையும் ‘கொரில்லா’ என்று டேக் செய்தது.
இந்தச் செயலியின் டேக்கினால் அவமானகரமாக உணர்ந்த ஜேக்கி அல்சைன், இது தொடர்பாக டுவிட்டரில் பதிவு செய்து, கூகுள் நிறுவனத்தின் குறைகளைத் தாறுமாறாக விமர்சனம் செய்தார். சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிய இந்தச் செய்தி, கூகுள் காதுகளுக்கு எட்டியது. உடனடியாக ஜேக்கி அல்சனிடம் மன்னிப்புக் கோரிய கூகுள், தற்போது ஃபோட்டோஸ் செயலியில் திருத்தம் கொண்டு வரும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.