புதுடில்லி, ஜூலை 2- நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பரம்பரை குறித்துத் தவறான தகவலை விக்கிபீடியாவில் திரித்துப் பதிவுசெய்த குற்றத்திற்காகப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
விக்கிபீடியா என்னும்இணையதளத் தகவல் களஞ்சியத்தில் எந்தத் தகவல் குறித்தும் விளக்கமான தகவல்களைப் பெற முடியும். அதுபோல, அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை, யார் வேண்டுமானாலும் மாற்றியமைக்கவும் முடியும்.
விக்கிபீடியா இணைய தளத்தில் பண்டித ஜவகர்லால் நேரு பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், நேரு பற்றிய சில தகவல்கள் திருத்தப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட தகவலாவது:
நேருவின் தந்தை பெயர், மோதிலால் நேரு. அவரின் தந்தை பெயர், கங்காதர் என விக்கிபீடியாவில் இருந்தது. அதைக் கங்காதரின் உண்மையான பெயர் கைசுதீன் காசி; அவர் ஒரு முஸ்லிம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கெடுபிடிகளுக்குப் பயந்து, தன் பெயரை அவர் கங்காதர் என மாற்றிக் கொண்டார் எனத் திருத்தப்பட்டது.
திருத்தியது யார்?
கடந்த மாதம் 26-ஆம் தேதி மத்திய அரசின் கணினி முகவரி ஒன்றிலிருந்து இத்தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம், நேரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் இல்லை; முஸ்லிம் என மாற்ற முயற்சி மேற்கொண்டதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.
விக்கிபீடியா இணையதள ஆசிரியர்கள், மாற்றியமைக்கப்பட்ட தகவல்களை நீக்கி, நேரு குறித்து இதற்கு முன் என்ன தகவல் இருந்ததோ, அதையே மீண்டும் பதிவு செய்தனர்.
இதுகுறித்துக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜவாலா கூறியதாவது:
ஜவகர்ஹர்லால் நேரு, அவரது தந்தை மோதிலால் நேரு, தாத்தா கங்காதர் நேரு ஆகியோர் முஸ்லிம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று விக்கிபீடியா இணையதளத் தகவல் களஞ்சியத்தின் பக்கத்தில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாகத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் குற்ற வழக்குப் பதிவு செய்து, விரிவான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
மேலும், இந்திய அரசுக்கு மென்பொருள் தொடர்பான அனைத்துச் சேவைகளையும் வழங்கிவரும் தேசியத் தகவல் மையத்தின் (என்.ஐ.சி.) இணையதளத் தொழில்நுட்பத்தின் மூலம், நேரு பரம்ரை குறித்த தகவல் திரித்து வெளியிடப்பட்டுள்ளது கடுமையாகக் கருதப்பட வேண்டிய விசயமாகும்.
இதுதொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்” என்று ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.