கோலாலம்பூர், ஜூலை 3 – மாராவில் பணியாற்றும் இரு மூத்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மாரா இன்கார்ப்பரேட் தலைவர் டத்தோ முகமட் லான் அலானி மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அப்துல் ஹலின் ஏ.ரஹிம் ஆகிய இருவரே அந்த அதிகாரிகள் என மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா) தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசா (படம்) தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் சொத்துக்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பிலான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
விசாரணை குறித்து எதிர்மறையான கருத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், பாரபட்சமின்றி விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்நடவடிக்கை உதவும் என்றார் அவர்.
“இடைநீக்க நடவடிக்கையை வைத்து இருவரும் தவறு செய்ததாக உறுதி செய்ய இயலாது. மாரா மீதான நல்லெண்ணத்தைக் கட்டிக் காக்கவும், விசாரணை சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்யவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என மாரா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அனுவார் மூசா குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் மாராவின் சொத்துக்களை மதிப்பீடு செய்ய நன்கு தகுதியுடைய கணக்காய்வு நிறுவனம் நியமிக்கப்பட உள்ளது என்றும், இதற்கான முடிவு மாரா மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“சொத்துக்கள் வாங்கியது தொடர்பான நடவடிக்கைகளில் சில சந்தேகங்கள் எழுந்ததன் காரணமாகவே கணக்காய்வு நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் தனது ஆய்வை உடனடியாகத் தொடங்கும். இதற்கெனக் கால அவகாசம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை,” என்றார் அனுவார் மூசா.