கோலாலம்பூர், ஜூலை 4 – நஜிப் மீதான தங்களின் குற்றச்சாட்டு, தக்க ஆதாரங்களுடன் தான் கூறப்பட்டுள்ளது எனப் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பல பில்லியன் ரிங்கிட் பரிமாற்றம் செய்யப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்டுள்ள செய்தியை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று மறுத்தார்.
தன் மீதான் குற்றச்சாட்டு பொய் என்று கூறிய நஜிப், வால் ஸ்ட்ரீட் ஜார்னல் மீது வழக்குத் தொடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனத்தின் ஹாங் காங் தலைவர் கென் பிரவுன் சிஎன்பிசி-க்கு அளித்துள்ள பேட்டியில், “அந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை நாங்கள் மிக கவனமாக விசாரணை நடத்திய பின் தக்க ஆதாரங்களுடன் தான் வெளியிட்டுள்ளோம். இதில் எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லை. பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குப் பில்லியன் கணக்கில் பண அனுப்பப்பட்டுள்ளதற்கான திடமான ஆதாரங்கள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.
அந்த ஆதாரங்கள் அனைத்தும் சட்டத்துறைத் தலைவருக்கும், பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கும் அனுப்பப்பட்டு அவர்கள் அதைப் பார்த்துவிட்டார்கள் என்றும் கென் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.