கோலாலம்பூர், ஜூலை 6 – கடந்த ஜூன் 15-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கோரி இருந்த இடைக்காலத் தடையுத்தரவை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிபதி அஸ்மாபி மொஹமட், சங்கப்பதிவிலாவிற்கும், இரண்டு மூன்றாம் தரப்பு (Intervenors) மனுதாரர்களுக்கும் செலவுத் தொகையாகத் தலா 5,000 ரிங்கிட் வழங்க உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் 15-ம் தேதி, பழனிவேல் தரப்பினரின் சங்கப்பதிவிலாகா உத்தரவுகளுக்கு எதிரான நீதிமன்ற மறு ஆய்வு மனுவை நிராகரித்த நீதிபதி அஸ்மாபி, சங்கங்களின் சட்டம், பிரிவு 16 (1)-க்கு உட்பட்டுத் தான், சங்கங்களின் பதிவிலாகா செயல்பட்டுள்ளது என்றும், அது தனது அதிகாரத்தை எவ்வகையிலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பழனிவேல் தரப்பினர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 19-ம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், டத்தோ எஸ்.சோதிநாதன், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மஇகா பொதுச்செயலாளர் ஏ.பிரகாஷ் ராவ் ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு கேட்டு மனுத் தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.