துபாய், ஜூலை 7 – முப்பரிமாண அச்சில் (3D-Printing) அலுவலகக் கட்டிடம் ஒன்றை உருவாக்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே துபாயில் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் குறித்த அருங்காட்சியகம் ஒன்றையும், கலாச்சாரத் திட்டங்களைப் பிரதிபலிக்கும் கட்டிடம் ஒன்றையும் உருவாக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் தற்போது புதிய அலுவலக் கட்டிடம் பற்றிய செய்திகளும் வெளியாகி உள்ளன.
முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் ஆரம்ப காலத்தில் தொழில்நுட்பப் பொருட்களின் முன்மாதிரிகள் தயாரிக்க மட்டும் பயன்பட்டு வந்தது. அதன் பின்னர் ஏற்பட்ட தொழிநுட்பப் புரட்சியில் இந்தத் தொழில்நுட்பம் மருத்துவம், ஆராய்ச்சி, தொழிற்சாலை மற்றும் கட்டுமானம் என ஆகிய துறைகளிலும் பயன்படத் தொடங்கி விட்டது. இதன் மூலம் ஒரு பொருள் உருவாக்கத்திற்குச் சாதாரணத் தயாரிப்பு முறைகளில் 3 மாதம் தேவைப்பட்டால் இந்த முறையில் 6 நாட்களே போதுமானது. அதன் காரணமாகவே துபாய் அரசு இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
புதிய தொழில்நுட்ப முறையில் உருவாகும் இந்தக் கட்டிடம், ஆய்வுக் கூடங்களில் அடுக்கடுக்காக உருவாக்கப்பட்டுப் பின்னர் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய முயற்சியில் துபாய் அரசு, முப்பரிமாண அச்சு முறையில் நிபுணத்துவம் பெற்ற சீனா நிறுவனமான ‘வின்சன் ப்ளஸ்’ (WinSun plus)-ன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க இருக்கிறது.
2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ‘உலகப் பொருட்காட்சி’ (World Expo)-ஐ, மனதில் வைத்துத் துபாய் அரசு பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முப்பரிமாணக் கட்டிடங்களும் துபாயின் நவீனத்துவத்திற்குக் கூடுதல் பெருமை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.