பெங்களூரு, ஜூலை 7 – தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராகக் கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகக் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் கணிதப்பிழை இருப்பதாகக் கூறி மறுவிசாரணைக்காகக் கர்நாடக அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்நிலையில், கர்நாடக அரசு சமர்ப்பித்த மனுவில், வழக்குத் தொடர்பான முக்கியக் குறிப்புகள், இந்த வழக்கில் ஆச்சாரியாவின் வக்காலத்து ஆணை ஆகியவை விடுபட்டுள்ளதாக உச்சநீதிமன்ற பதிவாளரே அரசுத் தரப்புக்குச் சுட்டிக்காட்டினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக வழக்கறிஞர் ஆச்சாரியா கூறுகையில், “மனு தாக்கலின்போது சிறு தவறுகள் ஏற்படுவதும், அதைச் சரி செய்து கொடுப்பதும் வழக்குகளில் சகஜமான ஒன்றுதான். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றப் பதிவாளர் பல்வேறு தகவல்களைக் கேட்டுள்ளார். விரைவில் அவர் கேட்டிருக்கும் தகவல்கள் இணைத்துக் கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வழக்கில் ஆச்சாரியா உட்பட பல்வேறு மூத்த வழக்கறிஞர்களின் மேற்பார்வையின் பேரில் தான் மனு தயாரிக்கப்பட்டது. அப்படி இருக்கையில், முக்கிய வழக்கறிஞரின் வக்காலத்து ஆணையைக் கூடவா தவற விடுவார்கள்? என்று கேள்வி எழுந்துள்ளது.