சென்னை, ஜூலை 9- கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “40 நாட்களில் ஒரு நல்ல படம் கொடுத்துள்ளோம். தயாரிப்பாளர் லாபம் அடைந்துள்ளார். சில படங்களில் வியாபார ரீதியாகச் சமரசம் செய்து கொள்வதுண்டு. ஆனால் ‘பாபநாசம்’ படம் அப்படி அல்ல; எங்களுக்கு மனத் திருப்தியை அளித்துள்ள படம்.
இந்தப் படத்தில் நடித்த அத்தனை பேருமே திறமையானவர்கள். என் கதாபாத்திரம் மட்டுமின்றி, மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக இருந்தால் தான் படம் வெற்றி பெறும். இந்தப் படத்தில் அது அமைந்தது. வியர்வைக்குப் பரிசாக வெற்றி கிடைத்துள்ளது.‘பாபநாசம்’ படத்தைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி” எனக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “உங்களை ‘உலக நாயகன்’ என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் காவலரிடம் நீங்கள் அடி–உதை வாங்குவது போல் காட்சி இருக்கிறதே… அது உங்களுக்குச் சங்கடத்தைத் தரவில்லையா?” என்ற கேள்விக்கு, அவர் கூறியதாவது:
“என்னை நான் குழந்தையாகப் பார்த்து இருக்கிறேன். எனது பெயர் நடிகன். கமல் என்று அழைக்கும்போது, வேறு யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
பட்டங்கள் நூல் கட்டாமல் பறப்பது. ரசிகர்களால் அன்போடு கொடுக்கப்பட்டது. தாய்மார்கள் என்னைச் சந்திக்கும்போது, அன்போடு நெற்றியில் விபூதி வைக்கின்றனர். அவர்களிடம், பகுத்தறிவு பேசிக்கொண்டு இருக்க முடியாது.
‘உலகநாயகன்’ என்ற பட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. நல்ல நடிகன் என்று பேசப்படுவதே போதுமானது” என்று வழக்கம் போல் தத்துவார்த்தமாகப் பதிலளித்தார்.