கோலாலம்பூர், ஜூலை 9 – கடந்த வாரம் சனிக்கிழமை (04.07.2015) அன்று பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்த மாணவர்களுக்கும், ஷா அலாம், கிள்ளான் போன்ற பகுதிகளிலிருந்து வந்த மூன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் திறன்மிகு ஆசிரியர் திரு.கே.பாலமுருகன் அவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழிக்கான விவேகப்பட்டறையைத் தேர்வின் அடிப்படையில் வழி நடத்தினார்.
எழுத்தாளரும் தமிழ்மொழிக்கான திறன்மிகு ஆசிரியருமான கே.பாலமுருகனின் பட்டறையில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்பனைத்திறன், உயர்நிலைச் சிந்தனை எனும் அணுகுமுறைகளை அறிந்துகொண்டு பயன்பெற்றனர். பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட ஆசிரியர் கே.பாலமுருகனின் எழுத்துத் திறனையும் சிறுவர் நாவல் எழுதி மாணவர்களுக்கு வழிகாட்டும் முறையையும் பாராட்டிப் பேசினர்.
வாக்கியம் அமைத்தல், சிறுகதை எழுதுதல், கற்பனைக் கட்டுரை எழுதுதல், கடிதம், உரை, அறிக்கை எழுதுதல் என மேலும் பல பகுதிகளில் மாணவர்களுக்கு எளிய விளக்கங்களையும் பயிற்சிகளையும் கெடா மாநிலத்தில் பணபுரியும் ஆசிரியர் கே.பாலமுருகன் சிறப்பான முறையில் வழங்கினார். அதோடுமட்டுமல்லாமல் வழிகாட்டிப் பட்டறையில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான சுடர் தமிழ்மொழிப் பயிற்சி நூல் இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்கள் சார்பாக ரவாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சர்மிதா அவர்கள் சுடர் நூலைப் பெற்றுக்கொண்டார். காலை 8.30-க்குத் தொடங்கிய அப்பட்டறை மதியம் 12.30-க்கு நிறைவுபெற்றது.
ஆறு மாதம் உடல்நிலை தொடர்பான சிகிச்சைக்கு இந்தியா சென்று திரும்பிய மாணவர் ஒருவரும் கே.பாலமுருகன் அவர்களின் தமிழ்மொழிப் பட்டறையில் கலந்துகொண்டு விடுபட்டுப் போன பல தகவல்களைப் பெற்றதாக அறிவித்தார். இந்த நிகழ்ச்சியிலேயே கே.பாலமுருகன் மாணவர்களுக்காக எழுதிய சிறுவர் நாவல்கள், பயிற்சி நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பெற்றோர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் அதனை வாங்கிக் கொண்டனர்.
இவ்வாண்டு 40% உயர்நிலைச் சிந்தனையோடு கேள்விகள் அமையும் என்றும் மாணவர்களின் அணுகுமுறை மாறுபட்டு வித்தியாசமான முறைகளில் இருக்க வேண்டும் என்றும் தமிழ்மொழிக்கான பட்டறையை வழிநடத்திய எழுத்தாளர் கே.பாலமுருகன் தெரிவித்தார். மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும் சிந்தனைத்திறனை மேம்படுத்தவுமே தான் நாடு முழுக்கப் பயணம் செய்து மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.