சென்னை, ஜூலை 10- ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்குக் கடல்வழிப் பாலம் அமைக்க ரூ.22 கோடி நிதியுதவி அளிக்க ஆசிய மேம்பாட்டு வங்கி முன்வந்துள்ளது.
இதன் மூலம் சுமார் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தின் தனுஷ்கோடி பகுதியில் இருந்து இலங்கைக்குப் பாலம் அமைக்க வேண்டும் எனத் தமிழகத்தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் இத்திட்டம் குறித்துத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டது.
சார்க் உறுப்பு நாடுகளைத் தரைவழி இணைப்பது போல், ராமேசுவரம் – இலங்கை இடையே பாலம் அமைப்பதும் இன்றியமையாதது எனப் பல்வேறு நிபுணர்களும் அரசிடம் கருத்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குப் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
“இத்திட்டத்தின் வழி ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும். நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறைகளில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது பாலம் அமைக்கும் திட்டம் குறித்து அடுத்தக்கட்ட ஆலோசனைகள் துரித கதியில் நடைபெறும்.
“இந்தத் திட்டத்தின் கீழ் ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடல்வழிப் பாலம் மற்றும் கடலுக்கு அடியில் சுரங்கங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த மெகா திட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி ரூ.22 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது,” என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.