Home இந்தியா மோடி,சுஷ்மா பற்றி ராகுல் பேச்சு: மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு-கட்காரி ஆவேசம்!

மோடி,சுஷ்மா பற்றி ராகுல் பேச்சு: மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு-கட்காரி ஆவேசம்!

623
0
SHARE
Ad

unnamed-251-720x480புதுடில்லி, ஜூலை 24- நேற்று பாராளுமன்றம் முடிந்து  வெளியே வந்த ராகுல்காந்தி செய்தியாளர்களிடம், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோரைத் தாக்கிப் பேசினார்.

அவர் பேசியதாவது: “லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே இருவர் மீதும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்துப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் ஆனால் அவரிடம் எதற்கும் பதில் இல்லை.

இந்தப் பிரச்சினைகள் குறித்து அவர் பதில் பேச வேண்டும் என்று  மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர் ஊழல்கள் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை; மக்களின் கேள்விக்குப் பதிலளிக்கவும் போவதில்லை. அது தவறு” என்றார்.

#TamilSchoolmychoice

மேலும், “அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாபெரும் தவறு செய்துள்ளார். அவர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டியவர். தேர்தலின்போது மோடி அளித்த வாக்குறுதியில், நான் ஊழலில் ஈடுபட மாட்டேன்; எனது அரசில் யாராவது ஊழலில் ஈடுபட்டால் சகித்துக் கொள்ள மாட்டேன் என்றார்.

ஆனால், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மறைமுகமாக அவர்களை ஊக்குவிக்கிறார். பிரதமரின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நரேந்திர மோடி பா.ஜனதாவின் பிரதமர் அல்ல; மாறாக இந்த நாட்டின் பிரதமர்” என்றும் அவர் பேசினார்.

இந்நிலையில், ராகுல்காந்தி கூறிய கருத்திற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்மீது அவதூறு வழக்குத் தொடுப்பேன்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

“பிரதமரைப் பற்றியும்,வெளியுறவுத்துறை அமைச்சர் பற்றியும் ராகுல் இவ்வாறு கூறியிருப்பது விரும்பத்தகாததாகும். இது நாட்டிற்கு மிகப்பெரிய அவமானமாகும்.

ராகுல் கூறிய கருத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது குற்றவியல் அவதூறு வழக்குப் பதிவு செய்யபடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.