குஜராத், ஜூலை 10- மேகி நூடுல்ஸைத் தொடர்ந்து யிப்பி நூடுல்ஸ்க்கும் குஜராத் அரசு தடை விதித்துள்ளது.
மேகி நூடுல்ஸில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் அளவுக்கு அதிகமான வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து நாடு முழுவதும் அந்த நூடுல்ஸ்க்குத் தடை விதிக்கப்பட்டது.அதையடுத்து அவையெல்லாம் சேகரிக்கப்பட்டு அழிக்கவும் செய்யப்பட்டன.
மேகி நூடுல்ஸ் சர்ச்சையைத் தொடர்ந்து, யிப்பி நூடுல்ஸ் குறித்தும் விளக்கம் அளிக்குமாறு ஐ.டி.சி நிறுவனத்துக்கு உத்தரகாண்ட் மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரி திலீப் ஜெயின் உத்தரவிட்டிருந்தார்.
பாக்கெட்டில் கூறப்பட்டுள்ள புரோட்டின், கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் கால்சியம் குறித்தும், அதன் உபயோகப்படுத்தும் காலம் (shelf life) குறித்தும், ஆய்வகப் பரிசோதனை அறிக்கையை 15 நாட்களுக்குள் தருமாறு அவர் கேட்டிருந்தார்.
புகையிலை மற்றும் உணவுப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஐ.டி.சி நிறுவனம், சன்ஃபீஸ்ட் என்ற பிராண்ட் பெயரில் யிப்பி நூடுல்ஸ் என்ற உணவுப் பொருளைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது யிப்பி நூடுல்ஸை ஆய்வு செய்ததில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் எம்.எஸ்.ஜி என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்ததால் இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இதைப்போல் உடனடி உணவான Bambino Macaroni க்கும் குஜராத் அரசு தடை விதித்துள்ளது.