சென்னை, ஜூலை 11 – திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி, பா.ஜ-வில் இணையப்போவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி, தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கொண்டாடத்திற்கு தலைமை தாங்க பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, தமிழகம் வர உள்ள நிலையில், குறிப்பிட்ட அந்நாளில் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ-வில் இணைவார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவார் என பா.ஜ.கட்சி வட்டாரங்கள் அறிவித்ததன் பின்னணியில் அழகிரி இணையப்போவது தான் காரணமாக உள்ளது என்றும் தெரியவருகிறது.
ஏற்கனவே அழகிரியின் தீவிர ஆதரவாளரான நெப்போலியன் பா.ஜ-வில் கடந்த ஆண்டு இணைந்த போதே, திரைமறைவில் அழகிரி தான் இருந்தார் என்று பரவலாக கூறப்பட்ட நிலையில், அழகிரியே பா.ஜனதாவில் இணையப் போகிறார் என்ற செய்தி தமிழகத்தில் குறிப்பாக திமுக வட்டாரத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
காலம் அனைத்து காயங்களையும் ஆற்றும், விரைவில் தந்தை (கருணாநிதி) தன்னை மீண்டும் இணைத்துக் கொள்வார் என்றே அழகிரி இதுநாள் வரை காத்திருந்ததாகவும், ஆனால் கருணாநிதியிடம் இருந்து சமாதானத்திற்கான எந்தவொரு அழைப்புகளும் வராததால், பெரும் ஏமாற்றம் அடைந்த அழகிரி, ஸ்டாலினை எதிர்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளார் என அழகிரியின் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.