புது டெல்லி, ஜூலை 12 – ஆப்பிள் பற்றியும், ஐபோன்கள் பற்றியும் அலசி ஆராய்பவர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி தான் ஐபோன் மற்றும் ஆப்பிள் கருவிகளின் முக்கிய உற்பத்தி நிறுவனமாகும். இதுவரை தைவான், சீனா போன்ற நாடுகளில் செயல்பட்டு வந்த ஃபாக்ஸ்கானின் பார்வை சமீபத்தில் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. வரும் 2020-ம் ஆண்டிற்குள் 10-12 உற்பத்தி ஆலைகளை உருவாக்க ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ள ஃபாக்ஸ்கான், இதன் மூலம் சுமார் 1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் மீது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் கவனம் திரும்புவதற்கு இந்தியாவின் வளர்ச்சி மட்டும் காரணம் அல்ல, சீனாவின் பொருளாதார சரிவும் மிக முக்கியக் காரணம்.
முதலில் ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் மகராஷ்டிராவில் தனது உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கும் ஃபாக்ஸ்கான், அதன் பிறகு படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் தனது கிளைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. உற்பத்தி ஆலைகள் மட்டுமல்லாமல், தகவல் மையங்கள் மற்றும் சில தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களையும் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் பல்வேறு இடங்களை பார்த்து வருகிறது.
இதற்கிடையே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் வருகையால், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் கருவிகள் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமல்லாமல் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் கருவிகளும் உற்பத்தி செய்யப்படும் என்றும், இதன் மூலம் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான தரம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.