ராஜீவ் படுகொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் கால் நூற்றாண்டு காலமாகச் சிறைவாசம் அனுபவதித்த நிலையில், அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மூவரும் தங்களுக்குரிய தண்டனையை விடுவிக்கக் கோரி இந்திய அதிபர் அலுவலகத்தில் மனு செய்தனர். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கருணை மனு மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தை காரணம் காட்டிக் கடந்த ஆண்டு மூவருக்கும் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இவ்வாறு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய 7 பேரும், இதுவரை அனுபவித்த தண்டனைக் காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் அறிவித்தது.
இதன் பேரில் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை வரும் 15ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இடம்பெறும் நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், யு.யு.லலித், ஏ.எம்.சப்ரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.