மதுரை, ஜூலை 13- பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் மு.க. அழகிரி பாஜகவில் இணையப் போவதாகத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், “என் தலைவர் அண்ணா, கருணாநிதி; என் கட்சி திமுக. பாரதீய ஜனதா கட்சியில் நான் சேரப் போவதாக வெளியான தகவல் பொய்யனது” என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டார். அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. மதுரையில் அவரது நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த பலர், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளரான நடிகர் நெப்போலியன், கடந்த ஆண்டு டிசம்பரில் பாஜகவில் இணைந்தார். மற்றொரு ஆதரவாளரான நடிகர் ஜே.கே.ரித்திஷ், அதிமுகவில் ஐக்கியமானார். இருப்பினும் மு.க.அழகிரி அமைதியாக இருந்து வரு கிறார்.
இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ஜூலை 15-ம் தேதி மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெறும் விழா விலும், விருதுநகரில் நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் விழாவிலும் பங்கேற்பதற்காக மதுரை வருகி றார். அப்போது அமித்ஷா முன் னிலையில் மு.க.அழகிரி பாஜக வில் இணையவிருப்பதாகச் செய்திகள் பரவின.
இது தொடர்பாக மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு-
“நான் பாரதீய ஜனதாவில் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. என்னுடைய தலைவர் அண்ணா. அவருக்குப் பிற்கு கருணாநிதி தான். என்னுடைய கட்சி தி.மு.க. தான். நான் கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். அவர் என்னைத் தொண்டனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது.
நான் மீண்டும் தி.மு.க.வில் எப்போது இணைவேன் என்பது பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அந்த நல்ல நாளுக்காகத் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்றால், அந்த நல்லநாள் எப்போது வரும் என்றும் நான் எதுவும் சொல்ல முடியாது” என்றார் அவர்.