சென்னை,ஜூலை 13- கடலில் இருந்து மீட்கப்பட்டப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி பிச்சாவரம் கடல் பகுதியில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடலோரப் பாதுகாப்புப் படை அலுவலகத்தில் அந்தக் கருப்புப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பெங்களூரு அல்லது கான்பூருக்கு அனுப்பி அதில் பதிவான தகவல்களைக் கண்டறிவது குறித்துக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்
விமானத்தின் கருப்புப் பெட்டியைக் கடலோரக் காவல்படையால் ஆய்வு செய்ய முடியாது என்பதால், விமானம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு அனுப்பலாமா? அல்லது கான்பூரில் உள்ள விமானம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அனுப்பலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
ஆலோசனை முடிவு குறித்து மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவிக்கப்படும். அவர்கள் இறுதியாகக் கூறும் இடத்தில் தான் கருப்புப் பெட்டி ஒப்படைக்கப்படும். அதன் பின்னர், கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து அதில் உள்ள தகவல்களை அந்த சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவிக்கும்.
அநேகமாக இன்று கருப்புப் பெட்டி அனுப்பப்படும் இடம் முடிவு செய்யப்பட்டு, மாலைக்குள் அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்ட கடல் பகுதியில் விமானிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், விமானத்தின் மற்ற உதிரி பாகங்களை 300 மீட்டர் கடற்பரப்பில் தேடி வருகிறார்கள்.