Home கலை உலகம் எம்.எஸ்.வி-க்கு ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; விஜயகாந்த் இரங்கல்.

எம்.எஸ்.வி-க்கு ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; விஜயகாந்த் இரங்கல்.

657
0
SHARE
Ad

MS Visvanathanசென்னை, ஜூலை 14- சென்னை சாந்தோமில் உள்ள எம்.எஸ்.விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று நண்பகல் 12 மணிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், திரையுலகப் பிரமுகர்களும், அரசியல் பிரபலங்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பாமரர்களையும் இசையை இரசிக்க வைத்தவர் எம்.எஸ்.வி எனத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“தமிழ்த் திரையுலகில் வரலாறு படைத்து, மேற்கத்திய இசையைத் தமிழ் இசையுடன் கலந்து, திரைப்படங்களின் வெற்றிக்குப் பெரும்பங்காற்றியவர்.

பாமரர்களும் இசையை விரும்பிக் கேட்கவைத்த இசையுலகின் மாமேதை.

சுமார் அறுபது வருடங்களுக்கும் மேலாகத் திரையுலகில் பயணம்செய்து 1200 படங்களுக்குமேல் இசையமைத்து, கலைமாமணி, இசைப்பேரறிஞர், வாழ்நாள் சாதனையாளர் போன்ற பல விருதுகளைப்பெற்றவர்.

இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராகத் திரையுலகில் முத்திரை பதித்தவர்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்த பெருமையும் இவரையேச் சாரும்.

இவ்வளவு பெருமைகளை பெற்றவர் உடல்நலக்குறைவால் இன்று (14.07.2015) அதிகாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். தமிழ்த்திரையுலகம் உள்ளவரை அவரது நினைவும், புகழும், பெருமையும் என்றென்றும் நிலைத்துநிற்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.