கோலாலம்பூர், ஜூலை 14 – கடந்த வார இறுதியில் லோ யாட் பிளாசாவில் நடந்த மோதல், வெறும் திருட்டினால் மட்டும் உருவானதல்ல, நஜிப் துன் ரசாகின் தலைமைத்துவம் அனுமதித்துள்ள இனவாத அரசியலின் எதிரொலி என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராகிம் விமர்சித்துள்ளார்.
குற்றத்தையும், இனவாதத்தால் உருவான சூழ்நிலையையும் எப்படி பிரித்துப் பார்ப்பது என்று பிரதமருக்குத் தெரியவில்லை என்றும் சைட் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நஜிப் கூறுவது போல் இது இனவாதப் பிரச்சனை இல்லை. குற்றம் தான் என்றால், ஐஜிபி-யால் அதைத் தடுத்து நிறுத்த இயலவில்லை என்றும் சைட் தெரிவித்துள்ளார்.
உண்மையாக நடந்தது இனவாத அரசியல் தான், நஜிப் தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சைட் குறிப்பிட்டுள்ளார்.
லோ யாட் பிளாசாவில் நடந்த சம்பவத்தை ஒரு குற்றமாகத் தான் பார்க்க வேண்டும். அதை ஒரு இனவாதப் பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.