Home நாடு மிருகங்களைப் போல் நடத்தப்பட்டோம் – லோ யாட் மோதலில் தாக்கப்பட்டவர் வேதனை

மிருகங்களைப் போல் நடத்தப்பட்டோம் – லோ யாட் மோதலில் தாக்கப்பட்டவர் வேதனை

585
0
SHARE
Ad

Low yat 1கோலாலம்பூர், ஜூலை 16 – லோ யாட் கலவரத்தின்போது தாக்குதலுக்கு ஆளான பேட்ரிக் லிம் (21 வயது), அந்த மோதலை தாம் தூண்டிவிட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். தனது இரு நண்பர்களுடன் தானும் தாக்கப்பட்டதாகவும், தனது கார் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

விற்பனையாளராக பணியாற்றி வரும் பேட்ரிக், சம்பவத்தன்று ஜாலான் புடுவில் இரவு உணவு உட்கொண்ட பின்னர் தாம் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், இன ரீதியிலான வார்த்தைகள் எதையும் கலவரக் கும்பலிடம் தான் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“லோ யாட் வணிக வளாகம் முன்பு கூடியிருந்த கும்பலின் முன்னிலையில் மலாய்க்காரர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றோ, இன ரீதியிலான வேறு வார்த்தைகளையோ நான் கூறவில்லை. நான் அத்தகைய வார்த்தைகளை உரக்கச் சொன்னதாக செய்திகள் வெளியானதை அறிவேன். ஆனால் அப்படி எதையும் கூறவில்லை. அந்தக் கும்பலை நான் எதிர்க்கவும் இல்லை.”

#TamilSchoolmychoice

“உங்களை 80 முதல் 100 பேர் சூழ்ந்திருக்கும்போது, சூப்பர் கதாநாயகர்களைப் போல் அவர்களைப் பார்த்து கத்துவதற்கும், சண்டை போடுவதற்கும் தைரியம் வருமா? எனவே தான் நான் அமைதி காத்தேன். உதவுவதற்கு யாருமின்றி, அதிர்ச்சியில் மூழ்கி இருந்தேன்,” என புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் லிம்.

சம்பவத்தன்று பெர்ஜாயா டைம் ஸ்கொயரின் அருகே தமது காரில் வந்து கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட லிம், அச்சமயம் கும்பலாக பலர் நிற்பதைக் கண்டதாகத் தெரிவித்தார்.

“எனது காரில் சென்ட்ரல் லாக் அமைப்பு இல்லை. இந்நிலையில் கூட்டத்தில் இருந்த ஒருவர் காரின் கதவைத் திறந்து நீ சீனனா? என்று விசாரித்தார். என்ன நடக்கிறது என்று புரியாத சூழ்நிலையில் நான் பதிலளிக்கவில்லை.இதையடுத்து நான் தங்கியிருக்கும் இடம் குறித்து கேட்டனர். நான் அம்பாங் அருகே வசிப்பதாகக் கூறியதும், என் முகத்தில் ஒருவர் பலமாகக் குத்தினார். அதன் பிறகு பலரும் கட்டைகளாலும், தலைக்கவசங்களாலும், இதர பொருட்களாலும் எங்களைத் தாக்கினர். காரின் கண்ணாடிகளை, கதவுகளை உடைத்ததுடன், காரின் மீதேறி குதிக்கவும் செய்தனர்.”

“பிறகு எனது செல்பேசியையும், பணத்தையும் பறித்துக் கொண்டனர். எனது நண்பர் ஒருவரது முகம் மற்றும் கைகள் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்தது. உடல்பெருத்த கனத்த நபர் ஒருவர் அவரது தலையில் உதைத்ததால் என் நண்பருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. நல்ல வேளையாக அவர் தற்போது சுய நினைவுடன் உள்ளார். உடலில் எலும்பு முறிவுகள் ஏதும் ஏற்படவில்லை. மொத்தத்தில் எங்களை மிருகங்களைப் போல் நடத்தி கடுமையாகத் தாக்கினர்,” என்று நடந்த சம்பவத்தை விவரிக்கிறார் பேட்ரிக் லிம்.

சுமார் பத்து நிமிடங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதன் பிறகு காவல்துறையினர் வந்து தங்களை மீட்டதாகக் கூறினார்.

தன்னை தாக்கியவர்களைப் பழிவாங்க விரும்பவில்லை என்றும், தமக்கு ஏராளமான மலாய் நண்பர்கள் இருப்பதாகவும் லிம் தெரிவித்தார். மேலும் இனவாதியாக இருப்பதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.