சென்னை, ஜுலை 17- எம்.எஸ். விஸ்வநாதனின் தாக்கம் தான் நான் என உருக்கமாகப் பேசியுள்ளார் இளையராஜா. மேலும், எம்.எஸ்.வி.யின் ஆன்மா சாந்தியடைய அவருக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளையும் இளையராஜா செய்துள்ளார்.
மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து இளையராஜா கூறியதாவது:
“நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய மானசீகக் குருவாக இருந்த சி.ஆர்.சுப்பராமன் எப்படி என்னுடைய உயிரில் உடலில் கலந்திருந்தாரோ அப்படியே எம்.எஸ்.வி.யும் என் உயிரில், உடலில், ரத்தநாளங்களில் இதயத் துடிப்பிலும் மூச்சுக் காற்றிலும் கலந்திருக்கிறார்.
“தேவதாஸ்’ படத்தை சி.ஆர் சுப்பராமனால் முடித்துக் கொடுக்க முடியாமல் போனது.
இதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் பாடல்களையும், பின்னணி இசைக்கோர்ப்புப் பணியையும், முடித்துக் கொடுத்தார் எம்.எஸ்.வி.
அந்தப் படத்தில் பிற பாடல்கள் நன்றாக இருந்தபோதும் எம்.எஸ்.வி. இசையமைத்த “உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்ற பாடல் அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இந்தப் பாடலின் வெற்றியால் தேவதாஸ் படம் நீண்டநாள் ஓடியது. அதேபோல் எம்.எஸ்.வியின் இசையினால் ஓடிய படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த இசை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதவை. அந்தத் தாக்கத்தின் அடையாளம்தான் இளையராஜா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது” என்று குரல் தழுதழுக்கக் கூறினார்.