புதுடில்லி, ஜூலை 20- நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை 4-ஆவது முறையாகப் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில், நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பான பரிந்துரைகளைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆய்வு செய்யும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் அலுவாலியா தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டுக் குழு, அறிக்கை தாக்கல் செய்ய ஆகஸ்டு 3-ஆம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மழைக்காலக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பாராளுமன்றத்தில் நிறைவேற வாய்ப்பு இல்லாததால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவதற்கு முன்பாக நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் 4-ஆவது முறையாகப் பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நரசிம்மராவ் மற்றும் தேவேகவுடா ஆகியோர் பிரதமராக இருந்த காலங்களில் 6 அவசரச் சட்டங்கள் இதுபோல் 3 முறை பிறப்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், 4-ஆவது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதில்லை. அப்படிப் பிறப்பிக்கப்பட்டால், அது இந்தியாவில் முதன்முறையாகஇருக்கும் என்று கூறப்படுகிறது.