கொழும்பு, ஜூலை 20- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 3-வது ஆட்டம் நேற்று கொழும்பில் பிரேமதாசா மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.
இந்தப் போட்டியின் போது இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை அணி 34 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து இருந்தபோது மைதானத்துக்குள் பாகிஸ்தான் வீரர் அருகே கல் ஒன்று விழுந்தது. இதனால் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மைதானத்தின் வெளியே இருந்து சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன. இதனால் பீதியடைந்த ரசிகர்கள் அங்கும், இங்கும் ஓடினார்கள்.
மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் கூச்சல்- குழப்பமாக இருந்தது. இதையடுத்து, போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் அறைக்கு உடனே திரும்பினார்கள்.
உடனே கலவரத் தடுப்புச் சிறப்புப் பிரிவு படையினர் வரவழைக்கப்பட்டனர். துப்பாக்கியுடன் வந்த அவர்கள் ரசிகர்களைக் கட்டுப்படுத்தினர். வெளியில் நின்ற ரசிகர்களை அப்புறப் படுத்தினர்.
நிலைமை கட்டுக்குள் வந்தபிறகு போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. ரசிகர்களின் ரகளையால் போட்டி அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.