திருச்சி, ஜூலை20- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால், ஜூலை 15-ஆம் தேதி நடக்கவிருந்த தேர்தல் ரத்தானது. தடையை எதிர்த்துச் சரத்குமார், ராதாரவி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இவ்வழக்கில் விஷால் அணியினருக்கே சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்தச் சுற்றுப்பயணத்தைச் சீர்குலைக்கும் முயற்சியிலும் சரத்குமார் அணியினர் ஈடுபடுவதாக விஷால் அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில், ஈரோடு நாடக நடிகர் சங்கத் தலைவர் ஆட்டோ ராஜா, நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினரை நாடக நடிகர்கள் ஆதரிக்க வேண்டும் என்று மிரட்டல் வருவதாகக் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார்.
இது விஷால் அணியினரின் நற்பெயரைக் கெடுப்பதற்காகச் சரத்குமார் அணியினர் கிளப்பி விடும் அவதூறு என்றனர்.
இந்நிலையில், நடிகர் ஜெரால்டு மில்டன் தலைமையில் நேற்று திருச்சி தேவர் மண்டபத்தில் நாடக நடிகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் விஷால் கலந்து கொண்டார்.
அப்போது அவர், “நடிகர் சங்கத் தேர்தலில் பதவி நாற்காலியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஊர் ஊராகச் செல்லவில்லை.
சினிமா தான் எனது குடும்பம். அந்தக் குடும்பத்தில் நாடகக் கலைஞர்களும் ஓர் அங்கத்தினர். அவர்களின் நலனுக்காக நான் குரல் கொடுப்பேன்.
நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நடந்துள்ளன. நடிகர் சங்கம் பற்றி விஷால் மட்டுமல்ல; எல்லா நடிகர்களும் இனிக் கேள்வி கேட்பார்கள்.அதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.
நடிகர் சங்கத் தேர்தலில் மனசாட்சிப்படி ஓட்டுப் போடுங்கள்; நிச்சயம் ஒரு மாற்றம் வந்தாக வேண்டும்” என்றார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது. நடிகர் சங்கத் தேர்தலில் மூத்த சினிமாக் கலைஞர் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்பட அனைத்து முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்து வாக்களிக்கும்படி கேட்போம்.
ராதாரவி நல்லவர் போல் பேசி வருகிறார். சத்தமாகப் பேசினால், உண்மை வெளியே தெரியாது என்று அவர் தப்புக் கணக்குப் போடுகிறார்.
ராதாரவி என்னைப் பற்றி, நாசரைப் பற்றி மட்டும் அல்ல; கமலஹாசன் பற்றியும் தவறாகப் பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்.
கமலஹாசன் எங்கள் அணிக்கு ஆதரவு தரவேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை; உண்மையைச் சொல்கிறேன்” என்றார்.
இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமல் பற்றி ராதாரவி பேசியது என்னவாக இருக்கும் என இப்போதே எல்லோரும் மண்டையைப் போட்டுக் குடைய ஆரம்பித்து விட்டார்கள்.
நடிகர் சங்கப் பிரச்சினை இனி இன்னொரு பரபரப்பையும் சந்திக்க இருக்கிறது.