கோலாலம்பூர், ஜூலை 20 – “கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. மதங்கள் கூறும் கடவுளின் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவை” என்று இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டீபன் ஹாக்கிங் ஸ்பெயினின் எல் முண்டோ பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், “பிரபஞ்சத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக விளக்க முடியும். அதனால் இங்கு கடவுளுக்கு வேலை இல்லை. நான் ஒரு நாத்திகன். கடவுள் இருந்தாலும், இல்லை என்றாலும் கடவுளுக்கு தெரிந்த அனைத்தும் மனிதனுக்கும் தெரியும். மனித மனம் தாண்டிய எந்தவொரு விஷயத்திலும் உண்மையில்லை என்பதே எனது கருத்து” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடவுள் மறுப்பு பற்றி ஸ்டீபன் ஹாக்கிங் கருத்து கூறுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த வருடம் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “தெய்வீகமான படைப்புகளை உருவாக்குவதற்கு முன்னர், கடவுள் கேள்வி கேட்பவர்களை தள்ளுவதற்காக நரகத்தை உருவாக்கினாரா என்ன?” என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.