கிரீஸ் நாடு, வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இதன் காரணமாகக் கடந்த 3 வாரங்களாக அங்கு வங்கிகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து கிரீஸை மீட்பதற்குக் கடனுதவி அளிப்பதற்கான புதிய சமரச ஒப்பந்தம் அந்த நாட்டுக்கும், அதற்குக் கடன் வழங்கும் யூரோ நாணயத்தைப் பொதுவாகப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் இடையே கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி சுமார் ரூ.5 லட்சத்து 93 ஆயிரம் கோடியை அடுத்த 3 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் கிரீஸிற்கு வழங்க இருக்கிறது. இதனையடுத்து, கடந்த 3 வாரங்களாக மூடியிருந்த வங்கிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
எனினும், வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கும், வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவதற்குமான கட்டுப்பாடுகள் தொடருகின்றன. தற்போதைய சூழலில் வாரமொன்றுக்கு ஒருவர் 420 யூரோக்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
புதிய கடன்மீட்புத் திட்டத்தின்படி அங்குப் போக்குவரத்து மற்றும் உணவகங்கள் உட்பட பல சேவைகளுக்கான வரியும், பொருட்கள் மீதான விற்பனை வரியும் அதிகரிக்கின்றன.
ஆகவே, கிரேக்க வங்கிச் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப மேலும் சில காலமாகலாம்.