ஜோத்பூர், ஜூலை 22 – வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், அமெரிக்காவிற்கு சென்ற ராகுல் காந்தி, போதைப் பொருளுடன் சிக்கினார். அந்த சமயத்தில் சோனியா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க வாஜ்பாய், அமெரிக்க அரசிடம் பேசி ராகுலைக் காப்பாற்றினார் என சுப்ரமணிய சாமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
லலித்மோடி விவகாரத்தில், பா.ஜ.க-விற்கு, காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், சுப்ரமணிய சாமி, ராகுல் பற்றி புதிய சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
ராகுல் காந்தி குறித்து சுப்ரமணிய சாமி கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2001-ம் ஆண்டு, அமெரிக்க புலனாய்வுத் துறையினரிடம், 1.60 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் போதைப் பொருளுடன் (White Powder) சிக்கிக் கொண்டார். ராகுலை விடுவிக்க, சோனியா காந்தி, அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் தொலைபேசியில் பேசிய வாஜ்பாய், ராகுலை அந்த பிரச்சனையில் இருந்து மீட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பற்றி சுப்ரமணிய சாமி கூறிய தகவல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.