Home நாடு மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தல் வேட்பு மனு ஆகஸ்ட் 21இல்! 92% மஇகா கிளைகள் பங்கு...

மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தல் வேட்பு மனு ஆகஸ்ட் 21இல்! 92% மஇகா கிளைகள் பங்கு பெறும்!

728
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 25 – நேற்று வெள்ளிக்கிழமை மாலை 24 ஜூலை 2015ஆம் நாள் நடைபெற்ற மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 21 ஆகஸ்ட் 2015ஆம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டி இருப்பின் தேசியத் தலைவருக்கான தேர்தல் 6 செப்டம்பர் 2015ஆம் தேதி நடைபெறும்.

MIC-Logo-Featureமஇகா அமைப்பு விதிகளின்படி கட்சியின் தேசியத் தலைவர் எல்லா மஇகா  கிளைத் தலைவர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவார். கடந்த ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் நடைபெற்ற மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களின்வழி 2,685 கிளைகள் தங்களின் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

கிளைத் தேர்தல்களில் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து சமரசம் காண குழுவொன்று அமைக்கப்பட்டு, கிளைகளில் எழுந்துள்ள புகார்கள் குறித்தும், கருத்து வேறுபாடுகள், மேல்முறையீடுகள் குறித்தும் விசாரித்து முடிவு செய்ய அந்தக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து மேலும் 260 கிளைகள் தங்களின் கிளைகளுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கலாம் என இந்த சமரசக் குழு முடிவெடுத்து சிபாரிசு செய்துள்ளது.

இந்தக் கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 1 ஆகஸ்ட் 2015இல் நடைபெறும். போட்டிகள் இருப்பின் தேர்தல்கள் 9 ஆகஸ்ட் 2015இல் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள், தேர்தல்கள் முடிவடையும்போது ஏறத்தாழ 2,945 கிளைகள் தங்களின் கிளைத் தேர்தல்களை முறையாக நடத்தி முடித்திருக்கும்.

மஇகா தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பின்படி தற்போது 2012ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த கிளைகளின் எண்ணிக்கை 3,195 ஆகும். எனவே, மொத்தமுள்ள கிளைகளில் ஏறத்தாழ 92 சதவீத கிளைகள் தங்களின் கிளைத் தேர்தல்களை முறையாக நடத்தி முடித்து, மஇகா தேசியத் தலைவர் தேர்தலில் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dr Subramaniamகிளைகளுக்கான தேர்தல்கள், வேட்புமனுத் தாக்கல்களைத் தவறவிட்ட கிளைகளின் மேல்முறையீடுகள் ஆகியவை தொடர்பில் மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவை அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், அனைத்துக் கிளைகளுக்கும் நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கங்களோடும், அணுகுமுறையோடும் செயல்பட்டதாகவும், இயன்ற வரையில் எல்லாக் கிளைகளையும் ஏற்றுக் கொள்ள முயற்சி செய்ததாகவும் மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் (படம்) இதன் தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.

மஇகா தேசியத் தலைவர் தேர்தல் வேட்புமனு ஆகஸ்ட் 21இல் நடைபெற்று முடிவடைந்து, புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்போது  மஇகா தலைமைத்துவப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வரும் என்பதோடு, கட்சியும் பழைய வலுவுடனும், கம்பீரத்துடனும் மீண்டும் மலேசிய அரசியல் அரங்கில் தனது முக்கியத்துவத்தை நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.