Home இந்தியா வ.உ.சிதம்பரனாரின் இளைய மகன் காலமானார்!

வ.உ.சிதம்பரனாரின் இளைய மகன் காலமானார்!

697
0
SHARE
Ad

vaaleshwaranசென்னை, ஜூலை 26 – செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் இளைய மகன் வாலேஸ்வரன் (88) சென்னையில் நேற்று காலமானார். தொழிலாளர் நலத்துறை இணை ஆணையராக பதவி வகித்து ஓய்வு பெற்ற வாலேஸ்வரன், இறுதிக் காலத்தை சென்னை மடிப்பாக்கத்தில் இளைய மகன் செல்வராமன் வீட்டில் கழித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடைசி மகனாகப் பிறந்த வாலேஸ்வரன் மீது சிந்தம்பரனார் அதிக அன்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொழிற்சங்கப் போராட்டங்கள் உட்பட பல போராட்டங்களில் வ.உ.சி பங்கேற்றதால், அவரின் வழக்கறிஞர் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்ற ஆங்கிலேய நீதிபதி வாலஸ் துரையின் மீது கொண்ட பற்றுதலால், தனது கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று சிந்தம்பரனார் பெயர் சூட்டி இருந்தார்.

தந்தையைப் போன்றே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்த வாலேஸ்வரன், அதிகாரப் பொறுப்பில் இருந்த போது நேர்மையானவராக திகழ்ந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இன்று நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். வாலேஸ்வரனின் கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டிருப்பது குறிப்படத்தக்கது.