கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி மஇகா வரலாற்றில் முக்கிய நாளாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் இதுவரை டாக்டர் சுப்ரா- பழனிவேல் என இரண்டு தரப்பாகப் பிரிந்து கிடந்த மஇகா கிளைகள் இனிமேல் எந்தப் பக்கம் நிற்க வேண்டியது என்பதை முடிவெடுக்க வேண்டிய இறுதி காலக் கெடு நாளாக ஆகஸ்ட் 9ஆம் தேதி பார்க்கப்படுகின்றது.
பழனிவேல் தரப்பினரின் தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலும்,
டாக்டர் சுப்ரா தரப்பினரின் கிளைத் தலைவர்களுக்கான மாநாடும் ஒரே நாளில் – ஆகஸ்ட் 9 இல் – ஏறத்தாழ ஒரே நேரத்தில் நடைபெறப் போவதுதான்,
ஆகஸ்ட் 9 – முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கான காரணம்!
இரண்டு தரப்பிலும் கிளைகள் வேட்புமனுத் தாக்கல்
மஇகா தலைமையகத்தின் அறிவிப்பின்படி இதுவரை 2,685 மஇகா கிளைகள், கிளைகளுக்கான தேர்தலில் வேட்புமனுத் தாக்கலைச் சமர்ப்பித்துள்ளன.
டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் இடைக்காலத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள மஇகாவில் ஏறத்தாழ 2,945 கிளைகள் தங்களின் வேட்புமனுத் தாக்கல்களை, தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டாக்டர் சுப்ரா தரப்பினரின் அதிகாரபூர்வ மஇகாவின் தேசியத்தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 21 ஆகஸ்ட் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பழனிவேல் தரப்பில் தலைமைச் செயலாளர் என்று கூறிக் கொள்ளும் டத்தோ சோதிநாதன் தங்கள் தரப்பில் 2,241 கிளைகள் இதுவரை கிளைகளுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல்களைச் சமர்ப்பித்துள்ளன என ஏற்கனவே அறிவித்துள்ளார்.
கிளைகள் முடிவு செய்ய வேண்டிய நேரம் நெருங்குகின்றது
இன்னும் கொஞ்ச நாளில் குறிப்பாக ஆகஸ்ட் 9இல் வெட்ட வெளிச்சமாகிவிடும்!
தற்போது நீடித்து வரும் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் பல கிளைகள் இரண்டு தரப்பிலும் கூட்டங்களில் கலந்து கொண்டு வருவதுதான் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஇகா தலைமையகத்தில் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்துள்ள மஇகா கிளைகளின் தலைவர்கள் சிலர் தொடர்ந்து பழனிவேல் தரப்பினரின் கூட்டங்களுக்கும் சென்று வருகின்றனர் என்பதால்தான் குழப்பம் நீடித்து வருகின்றது என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பழனிவேல் தரப்பினரின் தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தலைநகர் செந்துலில் உள்ள எச்.ஜி.எஸ் . மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய செயலவையின் இறுதி எச்சரிக்கை
இதற்கிடையில் கடந்த 24 ஜூலை 2015இல் நடைபெற்ற மஇகா 2009 மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சில முக்கிய முடிவுகளால் கிளைகளின் தலைவர்கள் இனியும் இரண்டு பக்கமும் சார்ந்து நிற்காமல் இறுதி முடிவு எடுக்க வேண்டிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சங்கப் பதிவகத்தால் அதிகாரபூர்வமான மஇகா என்ற அறிவிப்போடு, கடந்த 15 ஜூன் 2015ஆம் தேதி வழங்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து கடந்த 13 ஜூலை 2015ஆம் தேதி வழங்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும் –
இடைக்காலத் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் மஇகாதான் அதிகாரபூர்வமானது என்பதை மறு உறுதிப்படுத்தியுள்ளது என்பதையும், சக்திவேல், மஇகா தலைமையகம் அனுப்பிய சுற்றறிக்கை ஒன்றில் கிளைகளுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.
மேலும் கட்சியில் பிளவுகள் ஏற்படுத்தும் நோக்கிலும், கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தும் விதத்திலும் நடத்தப்படும் இந்தத் தரப்பினரின் கூட்டங்களில் இனியும் மஇகா கிளைத் தலைவர்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அனைத்து கிளைகளுக்கும் மஇகா மத்திய செயலவை உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 9-இல் மஇகா கிளைத் தலைவர்கள் மாநாடு
இந்த சூழ்நிலையில்தான், பழனிவேல் தரப்பினரின் தேசியத் தலைவர் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் அதே ஆகஸ்ட் 9ஆம் தேதி மஇகா கிளைத் தலைவர்களுக்கான சிறப்பு மாநாடு சுபாங்கில் நடைபெறப் போவதாக மஇகா தலைமையகம் அறிவித்துள்ளது.
எனவே, பெரும்பாலான மஇகா கிளைகள் மஇகா தலைமையகம் நடத்தும் மாநாட்டில் கலந்து கொண்டு டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்திற்கு தங்களின் ஆதரவை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே வேளையில், மஇகா மத்திய செயலவை விடுத்துள்ள எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு, தற்போது இரண்டு பக்கமும் தலைகாட்டி வரும் கிளைத் தலைவர்கள் பழனிவேல் தரப்பினரின் வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பழனிவேலுவின் தீவிர ஆதரவு கிளைத் தலைவர்கள் மட்டுமே அவருடன் இணைந்து நின்று வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களின் எண்ணிக்கையும் எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தெரிந்து விடும்.
இருப்பினும், பல கிளைத்தலைவர்களிடம் முன்கூட்டியே பழனிவேல் தரப்பினர் தேசியத் தலைவருக்கான வேட்புமனுப் பாரத்தில் கையெழுத்து வாங்கி வைத்திருப்பதாகவும் இதையும் சேர்த்து, மொத்த எண்ணிக்கையாக ஆகஸ்ட் 9இல் தேசியத் தலைவருக்கு ஆதரவாகக் கிடைத்த வேட்புமனுக்கள் என அறிவிப்பார்கள் என்றும் பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆகஸ்ட் 9 – இறுதிக் கட்ட எண்ணிக்கை
மஇகா தலைமையகம் நடத்தும் கிளைத் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும்,
பழனிவேல் தரப்பில் தேசியத் தலைவருக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யும் கிளைகளின் எண்ணிக்கையும்,
மஇகாவின் நடப்பு நிலவரத்தை பார்வையாளர்களுக்கு தெளிவாகக் காட்டப் போகிறது.
அதே வேளையில், இதுவரை எப்படி நடந்து கொண்டிருந்தாலும்,
இனிமேல் பழனிவேல் தரப்பினரின் தேசியத் தலைவர் வேட்புமனுத் தாக்கலில் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டுமா? –
அப்படி செய்வதன் மூலம் தங்களின் கிளை செயல்பாட்டை மஇகா தலைமையகம் முடக்கி வைக்கக் கூடிய நிலைமைக்கு ஆளாக வேண்டுமா?
அல்லது சங்கப் பதிவகத்தாலும், நீதிமன்றத் தீர்ப்புகளாலும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய மஇகா தலைமையகத்துடன் இணைந்து கொண்டு, டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தின் கீழ் தங்களின் அரசியல் பயணத்தைத் தொடர வேண்டுமா?
இனி எந்தப் பக்கம்?
என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு விடை கண்டு, கிளைத் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டிய இறுதிக் கட்ட நாளாக, ஆகஸ்ட் 9ஆம் தேதி பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்