அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் அடங்கிய பட்டியலை நேற்று நள்ளிரவில் பேரரசரிடம் ஒப்படைத்துள்ளதாக அம்னோ ஆதரவு பத்திரிக்கையான உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.
இன்று மதியமே பேரரசர் அதற்கு அனுமதி வழங்கி முடிவுகள் அறிவிக்கப்படலாம் என ஆரூடங்கள் கூறப்படுகின்றன.
1எம்டிபி விவகாரத்தில் பிரதமருக்கு எதிராக விமர்சித்து வரும் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அந்த புதிய அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெறப் போவதில்லை என்றும், அவருக்குப் பதிலாக உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி துணைப்பிரதமராக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில், சாஹிட் தனது உள்துறை அமைச்சர் பதவியையும் தற்காப்பார் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சித் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான், தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாகவும் உத்துசான் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், செப்டம்பரில் மஇகா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், அந்த புதிய அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், துணை அமைச்சர் ஒருவர் அமைச்சராகவும், இரண்டு புதியவர்கள் துணையமைச்சர்களாகவும் நியமிக்கப்படவுள்ளதாகவும் உத்துசான் தெரிவித்துள்ளது.