கோலாலம்பூர், ஜூலை 29 – அமைச்சரவையில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசினை நீக்க பிரதமருக்கு உரிமை உள்ளது என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே பிரதமரின் இந்த முடிவை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
“தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் நாம் அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேணடும். தற்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றும் புதியதல்ல. முன்னாள் பிரதமர்களும் இவ்வாறு செய்துள்ளனர்,” என்று தற்காப்புத்துறை தொடர்பான கண்காட்சியை துவங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார் ஹிஷாமுடின்.
எனினும் மொகிதின் ஆதரவாளர்கள் தனிப்பட்ட நபரை முதன்மைப்படுத்தாமல் நாடு மற்றும் கட்சியின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பர் என தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களுக்கும், நாட்டுக்குமான கடமைகளை முன்னிறுத்தி தொடர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.
தற்காப்பு அமைச்சராக தொடர்ந்து நீடிப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தாம் அதே பதவியில் நீடிப்பது நிம்மதி அளித்திருப்பதாகக் கூறினார்.
துணைப் பிரதமர் பதவியில் இருந்து மொகிதின் நீக்கப்பட்டதை கடுமையான நடவடிக்கையாகக் கருதுகிறீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு, “இதுகுறித்து நான் கருத்து ஏதும் தெரிவிக்க இயலாது. ஏனெனில் இது பிரதமரின் முடிவு,” என்று அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவருமான ஹிஷாமுடின் மேலும் தெரிவித்தார்.