சென்னை, ஜூலை 29 – மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாமின் இறுதிச்சடங்குகள் நாளை 30-ம் தேதி அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், நேற்று முன்தினம் இரவு இமாச்சல பிரதேச தலைநகர் ஷில்லாமில், கல்லூரி ஒன்றில் உரையாற்றச் சென்ற போது மாரடைப்பால் காலமானார்.
நேற்று அவரது நல்லுடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, இன்று காலை இந்திய நேரப்படி, 7 மணியளவில் டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் இருந்து கலாமின் நல்லுடல் பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மதுரைக்கு கொண்டு செல்லப்படும் கலாமின் நல்லுடலை தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசய்யா பெறுகிறார்.
இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கலாமின் நல்லுடல், ராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமேஸ்வரத்தில் கலாமின் நல்லுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து, அப்துல் கலாமின் உடலுக்கு நாளை (30 ஆம் தேதி) இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்டு, இறுதி அஞ்சலி செலுத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.