Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்!

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்!

516
0
SHARE
Ad

vishal-sarathசென்னை,ஜூலை 29- தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தேர்தலை விரைவில்அறிவித்து நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனைச் சென்னை  உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், பொதுச் செயலாளர் ராதாரவியும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் ஜுன் 15-ஆம் தேதி புதன்கிழமையன்று நடைபெறும் என்று கடந்த ஜூன் 5-ஆம் தேதி அறிவித்தனர்.

திரைப்படச் சங்கங்களின் தேர்தல் எப்போதும் பொதுவாக ஞாயிற்றுக் கிழமையன்று பொது விடுமுறை தினத்தில் தான் நடைபெறும்; அப்போது தான் அனைவரும் ஓட்டளிக்க வசதியாக இருக்கும். எனவே, தேர்தலை இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று வைக்க வேண்டும் என்று நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் முதலானோர் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆகவே, இந்த அறிவிப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, நடிகர்கள் சங்கத் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து கடந்த ஜூன் 26-ந் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த தடையை நீக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

கடந்த 7-ஆம்தேதி நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், நடிகர் சங்கத்தின் விதிகளுக்குட்பட்டே தேர்தலை அறிவித்து நடத்தவிருப்பதாக ராதாரவி சார்பில் கூறப்பட்டது.

இதனால், ‘தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் துணை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா?’ என்பதை உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்துச் சங்கங்களின் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி,நேற்று மீண்டும் ஆரம்பித்த விசாரணையின் போது, அனைத்துச் சங்கங்களின் பதிவாளர் தன்னுடைய அறிக்கையை நீதிபதிகள் முன்பு தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையை ஆராய்ந்த பின், “தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் அதிகாரியாக உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபன் அவர்களை நியமித்துள்ளோம். அவர் தேர்தல் தேதியை அறிவித்துத் தேர்தலை நடத்தி, அதன் முடிவுகளையும் வெளியிடுவார்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.