மும்பை, ஜூலை 30- இந்தியாவிற்கு அப்துல் கலாம் ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பாராட்டும் விதமாக, அவரை நினைவு கூரும் முகமாக, அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியை வாசிப்பு தினமாகக் கொண்டாடப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது.
அப்துல் கலாம் புத்தகம் வாசிப்பதிலும்,புத்தகம் எழுதுவதிலும் அதிக நாட்டம் உள்ளவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் தான் ஒரு மனிதனை அறிவாளியாக ஆக்குகிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.
மாணவர்களிடம் உரையாற்றும் போதெல்லாம் புத்தகம் வாசியுங்கள் என வலியுறுத்துவார். அண்மையில் மதுரையில் பள்ளி சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது கூட பெற்றோர்களிடம், “தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளுடன் சேர்ந்து தினந்தோறும் புத்தகம் வாசியுங்கள். அதுதான் அறிவார்ந்த குழந்தைகள் வளர ஆதாரம்” எனப் பேசினார்.
ஆகையால், அவரது பிறந்த நாளை வாசிப்பு தினமாகக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானதாகும்.