Home நாடு மஇகா உறுப்பியத்தை நிலைநாட்ட கே.இராமலிங்கம் சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார்!

மஇகா உறுப்பியத்தை நிலைநாட்ட கே.இராமலிங்கம் சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார்!

738
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 30 – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதியின் முன்னாள் தலைவருமான கே.இராமலிங்கம், தானும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் ஆகிய நால்வரும் மஇகா உறுப்பினர்கள் அல்ல என்ற சங்கப் பதிவக முடிவை எதிர்த்து  இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

K.Ramalingam MIC Batuசங்கப் பதிவகம் செய்துள்ள முடிவால், தான் மஇகா உறுப்பியத்தை இழந்துள்ளதாகவும் அந்த முடிவு மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் இராமலிங்கம் (படம்)  தொடுத்துள்ள வழக்கை வழக்கறிஞர்கள் எஸ்.செல்வம் மற்றும் கோகிலவாணி வடிவேலு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் வெற்றி பெற்றால், இராமலிங்கம், பழனிவேல், சோதிநாதன், பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் ஆகிய ஐவரும் மீண்டும் மஇகா உறுப்பினர்களாக அறிவிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.

#TamilSchoolmychoice

பிரிவு 91இன்படி மஇகா விவகாரத்தில், மத்திய செயலவையின் முன் அனுமதியின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்திற்காக மேற்குறிப்பிட்ட ஐவரும் தங்களின் உறுப்பியத்தை இயல்பாகவே இழந்து விட்டனர் என 2009 இடைக்கால மத்திய செயலவை முடிவு செய்தது. அந்த முடிவை சங்கப் பதிவகமும் ஒப்புக்கொண்டு, பழனிவேல் மஇகா உறுப்பினர் அல்ல என்று அறிவித்து, டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தை இடைக்காலத் தேசியத் தலைவராக அறிவித்திருந்தது.

சங்கப் பதிவகம் செய்துள்ள முடிவை அறிவிக்கும் 25 ஜூன் 2015 தேதியிட்ட கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இராமலிங்கம் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தக் கடிதத்தில் சங்கப் பதிவக தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ராசின் அப்துல்லா கையெழுத்திட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தின்படி பழனிவேலு மஇகா உறுப்பியத்தை இழந்துள்ளதால் அவருக்குப் பதிலாக டாக்டர் ச.சுப்ரமணியம் மஇகாவின் இடைக்காலத் தேசியத் தலைவராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

சங்கப் பதிவகத்தின் முடிவால் மலேசிய அரசியல் சாசனத்தின்படி தனக்கு வழங்கப்பட்டிருக்கும் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின்படி தனது மஇகா உறுப்பியம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் தனது மனுவில் இராமலிங்கம் கோரியிருக்கின்றார்.

இந்த வழக்கிற்கான விசாரணை தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இராமலிங்கத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.