Home Featured நாடு நஜிப்புக்கு எதிராக கேள்வி எழுப்பும் முதல் அம்னோ தொகுதி – குளுவாங்

நஜிப்புக்கு எதிராக கேள்வி எழுப்பும் முதல் அம்னோ தொகுதி – குளுவாங்

647
0
SHARE
Ad

குளுவாங், ஆகஸ்ட் 3 – துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொகிதின் யாசினை இதற்கு முன்பு சில அம்னோ தொகுதிகள் தங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்புகள் விடுத்திருந்தன. ஆனால், துணைப் பிரதமர் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டவுடன் இந்த அம்னோ தொகுதிகள் எல்லாம் ஒவ்வொன்றாக மொகிதினுக்கு வழங்கிய அழைப்பை மீட்டுக் கொண்டுள்ளன.

Najib at UMNO assembly Nov 2014இந்நிலையில் நேற்று குளுவாங் அம்னோ தொகுதி மொகிதின் யாசினுக்கு வரவேற்பு கொடுத்து தங்களின் தொகுதிக் கூட்டத்தைத் திறந்து வைத்து உரையாற்ற தைரியமாக முடிவெடுத்திருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் பதிலளிக்க இயலவில்லை என்றும், இதுவே அம்னோவின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும் என்றும் குளுவாங் அம்னோ பிரிவு கருத்து தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

எனவே பிரதமர், கட்சியின் தலைவர் என்ற வகையில் நஜிப்பைக் காப்பாற்றுவதா, அல்லது அம்னோவைக் காப்பாற்றுவதா என்பது குறித்து அம்னோ தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும் என குளுவாங் அம்னோ வலியுறுத்தி உள்ளது.

நேற்று நடைபெற்ற குளுவாங் அம்னோ தொகுதி கூட்டத்தில், அம்னோ கிளை ஒன்றின் சார்பில் இது தொடர்பாக தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் அல்தான்துயா கொலை வழக்கு மற்றும் 1எம்டிபி நிதி முறைகேடு, அரசு மிக ஆடம்பரமான நவீன விமானம் வாங்கியது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

“கட்சியின் முதல்நிலை தலைவரை நோக்கி சமூக ஊடகங்கள் மற்றும் இதர ஊடகங்கள், இணைய வலைப் பக்கங்களில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க இயலாதது அம்னோ உறுப்பினர்கள் என்ற வகையில் எங்களை கவலையடையச் செய்துள்ளது,” என ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருவேளை நஜிப்பால் இக்கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை அளிக்க முடியாது போகும் பட்சத்தில், அனைத்து மட்டங்களிலும் உள்ள அம்னோ தலைவர்கள் தனிப்பட்ட நபரை கருத்தில் கொள்ளாமல், கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அம்னோவினர் எனது பின்னால் அணிவகுத்து நிற்கின்றார்கள் என பிரதமர் நஜிப் எல்லா இடங்களிலும் முழங்கி வரும் வேளையில் குளுவாங் அம்னோ தொகுதி பூனைக்கு மணி கட்டுவது போல் இந்த தீர்மானத்தின் மூலம், நஜிப்புக்கு எதிரான முழக்கத்தை முதன் முதலாகப் பதிவு செய்துள்ளது.

“மலாய்க்காரர்களின் முதுகெலும்பாக விங்கி வரும் அம்னோ அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர் சரிவைச் சந்திக்கக் கூடிய ஆபத்து நிலவி வருகிறது,” என்று குளுவாங் தொகுதியின் அம்னோ கிளைத் தலைவர்களில் ஒருவரான காலி ஹாசன் கவலை தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற செராஸ் அம்னோ தொகுதிக் கூட்டத்தில், பேசிய முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் 1எம்டிபி விவகாரம் குறித்து பிரதமர் நஜிப் தாமே முன்வந்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குளுவாங் தொகுதியும் அதேபோன்ற கருத்தை வலியுறுத்தி உள்ளது.

இதே குளுவாங் அம்னோ தொகுதி கூட்டத்தில்தான் மொகிதின் யாசினும் நேற்று கலந்து கொண்டார்.