சென்னை,ஆகஸ்டு3- மதுக்கடைகளை மூடக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மதுக்கடைகளையும் அடித்து நொறுக்கிய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ – மாணவியர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது.
வைகோ, தொல்.திருமாவளவன் தலைமையில் நாளை எதிர்க்கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்நிலையில்,பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிப் பச்சையப்பன் கல்லூரி மாணவ- மாணவியர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“புத்தகத்தைப் படிக்கவா? இல்லை,சாராயத்தைக் குடுக்கவா?” என்றும், “’டாஸ்மாக் ஒழிக! இளைஞர்களைச் சீரழிக்கும் டாஸ்மாக் ஒழிக!” என்றும் உரத்த முழக்கங்கள் இட்டபடி, அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைக்குள் புகுந்து மதுப்பாட்டில்களை அடித்து நொறுக்கினர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் அங்கே காவலுக்கு இருந்த காவல்துறையினர் தகவல் கொடுத்துக் கூடுதல் காவல்துறையினரை வரவழைத்தனர். கூடுதல் காவல்துறையினர் வந்து மாணவர்களைத் தடுக்க முயன்றும் முடியாததால்,தடியடி நடத்தத் தொடங்கினர்.
இதனால் மாணவ-மாணவிகள் நாலா புறமும் சிதறி ஓடினார்கள். பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவிகள் சிலர் மயங்கி விழுந்தனர்.
இத்தடியடி சம்பவத்தால் அப்பகுதி பெரிய வன்முறை நடந்து முடிந்தது போல் அலங்கோலமாகக் காட்சி தருகிறது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடிதடிக்குப் பேர் போனவர்கள் என்பதாலும், அவர்கள் மீதே காவல்துறை தடியடி நடத்தியிருப்பதாலும், அடுத்து என்ன நடக்குமோ என்கிற பதற்றத்தில் அப்பகுதி மக்கள் தவிக்கிறார்கள்.
போராட்டம் பெரிதாக வெடிக்கக் கூடும் என்பதால் கூடுதல் காவல்துறையினர் அங்கே காவலுக்குப் போடப்பட்டுள்ளனர்.