Home Featured நாடு அனைத்து தொகுதிகளிலும் அம்னோவே போட்டியிட வேண்டுமென கூறவில்லை: முகமட் ஹாசன் விளக்கம்

அனைத்து தொகுதிகளிலும் அம்னோவே போட்டியிட வேண்டுமென கூறவில்லை: முகமட் ஹாசன் விளக்கம்

546
0
SHARE
Ad

சிரம்பான், ஆகஸ்ட் 4 – கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி நெகிரி மாநிலத்தில் அம்னோவால் தனித்து ஆட்சியமைக்க இயலும் என தாம் ஒருபோதும் கூறவில்லை என அம்மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்துள்ளார்.

நெகிரியில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் அடுத்த முறை அம்னோ மட்டுமே போட்டியிட வேண்டும் என தாம் கூறியதாக வெளியான தகவலயும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“தே.மு.வை பலப்படுத்துவதே நோக்கம்” 

#TamilSchoolmychoice

Mohamed Hassan Negeri MB“தேசிய முன்னணியை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது குறித்து மட்டுமே நான் சிந்தித்து வருகிறேன். தேசிய முன்னணியை பலப்படுத்தும் விதமாக, மரபுப்படி மேற்கொள்ளப்படும் தொகுதிப் பங்கீட்டு முறையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மட்டுமே நான் கூறினேன். எனவே வெளிப்படையாக நான் இவ்வாறு கூறியதில் எந்தவித உள்நோக்கமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை,” என முகமட் ஹாசான்  திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்பிட்ட ஒரு தொகுதியில் அம்னோ வெற்றிபெற நல்ல வாய்ப்புள்ளது எனில், அத்தொகுதிக்கான வேட்பாளரை அம்னோவின் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்வதில் தவறில்லை என்றார் அவர்.

அதற்குப் பதிலாக தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுக்கு செனட்டர் பதவி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் அமைச்சர் அல்லது துணையமைச்சர் பதவியைப் பெற அக்கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைப்பதாகத் தெரிவித்தார்.

“தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும் என்பதே இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அடுத்த முறை மிகக் கடினமானதொரு பொதுத்தேர்தலை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். எனவே உரிய பலன் அளிக்கவில்லை எனில், தொகுதிப் பங்கீடு தொடர்பில் பழைய நடைமுறைகளை நாம் பின்பற்றுவது அர்த்தமற்றது” என்றும் முகமட் ஹாசான் வலியுறுத்தினார்.

“நெகிரி மாநிலத்தில் உள்ள 36 தொகுதிகளிலும் அம்னோ மட்டுமே போட்டியிட வேண்டுமென நான் கூறவில்லை. அம்னோவுக்கு ஒதுக்கப்படும் 22 தொகுதிகளில் 21ல் வெற்றி பெற்றால், தேசிய முன்னணியின் இதர உறுப்புக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் 14 தொகுதிகளில் ஒன்றில் கூட அவை வெற்றி பெறாவிட்டாலும், அம்னோவால் ஆட்சியமைக்க முடியும் என்று மட்டுமே கூறினேன்.  எனவே எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அவை உண்மையா எனப் பரிசீலிக்க வேண்டும். இல்லையெனில் பிறகு நீங்கள் கூறுவது பலத்த சேதங்களை ஏற்படுத்தும்” என்றார் முகமட் ஹாசான்.

கடந்த பொதுத்தேர்தலில் அம்னோ 21 தொகுதிகளிலும், மஇகா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சிகள் 14 தொகுதிகளை தங்கள் வசமாக்கின.

அடுத்த பொதுத் தேர்தலில் தற்போதுள்ள தொகுதிகளை மீண்டும் தற்காத்துக் கொண்டு, கூடுதலாக மேலும் நான்கு அல்லது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை எதிர்க்கட்சிகள் வென்றால் போதும், நெகிரி மாநிலம் எதிர்க்கட்சிகளின் வசமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நெகிரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அம்னோ மட்டுமே போட்டியிட வேண்டும் என்றும், ஆட்சியமைக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்றும் முகமட் ஹாசான் கூறியதாக தகவல் வெளியானது.

ஹாசானின் கருத்து தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளிடையே பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்தது. மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சி.சிவராஜ் இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.