புதுடில்லி, ஆகஸ்டு 4- ஏறக்குறைய 70 ஆண்டு காலமாக நீடித்து வந்த நாகலாந்துக் கிளர்ச்சிக் குழுவின் தனி நாடு போராட்டத்திற்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
னி நாடு கோரிப் போராடிவந்த என்.எஸ்.சி.என் மற்றும் ஐ.எம் தீவிரவாத இயக்கத்துடன் பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.
நாகாலாந்து, மணிப்பூர், அசாம் ஆகிய மாநிலங்களில் நாகா இன மக்கள் வாழ்ந்து வரும் பகுதிகளை உள்ளடக்கித் தனி நாடு உருவாக்க வேண்டும் என 1980 முதல் நாகாலாந்து தேசிய சமத்துவ கவுன்சில் என்ற அமைப்பு போராடி வந்தது.
கடந்த 1988ல் இந்த இயக்கத்தில் பிரிவினை ஏற்பட்டு என்.எஸ்.சி.என் மற்றும் ஐ.எம் என்னும் புதிய அமைப்பு உருவாகிப் போராட்டக் களத்தில் இறங்கியது. இதன் காரண்மாக ஏராளமான பொது மக்கள் உயிரிழந்தனர்.
இந்தப் பிரச்சினையைப் பிரதமர் மோடி முடிவுக்குக் கொண்டு வர விரும்பினார். பிரதமரின் இம்முயற்சியால் கிளர்ச்சியாளர்களுடன் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பொதுச் செயலர் துய்ங்கலெங் முய்வா ஆகியோர் முன்னிலையில் நேற்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்த உடன்பாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இனிமேல் அந்தப் பிராந்தியங்களில் என்றைக்கும் அமைதி நிலவும் என்றும் தெரிவித்தார்.