கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் அன்வாரின் அரச மன்னிப்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பில், அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் படி அன்வார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.
இன்று இந்த வழக்கு நீதிபதி அஸ்மாபி முகமட்டின் பார்வைக்கு வந்ததையடுத்து, அவர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17 -க்கு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார்.
ஒரினப் புணர்ச்சி வழக்கில் அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அரச மன்னிப்பு கோரி கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி அன்வாரின் மனைவி மற்றும் இரு மகள்கள் மாமன்னரிடம் மனு அளித்தனர்.
அதனையடுத்து கடந்த மார்ச் 16-ஆம் தேதி, அன்வார் தரப்பின் மனுவை, அரச மன்னிப்பு வாரியம் நிராகரிப்பதாக அறிவித்தது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி, மன்னிப்பு வாரியம் எதன் அடிப்படையில் இத்தகைய முடிவுக்கு வந்தது என்பதை விவரிக்கக் கோரி அன்வார் குடும்பத்தார் மனு அளித்தனர். இது தொடர்பாகத் தங்களுக்கு எந்தவிதப் பதிலும் வரவில்லை என அன்வார் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில்,அன்வாரை மன்னித்து விடுவிக்க, மாமன்னருக்கு பொதுமன்னிப்பு வாரியம் ஆலோசனை வழங்க உத்தரவிடக் கோரி அன்வாரின் மனைவி வான் அசிசா வான் இஸ்மாயிலும், அவரது இரு மகள்களும் கடந்த ஜூன் 24-ம் தேதி நீதிமன்றத்தை அணுகினர் என்பது குறிப்பிடத்தக்கது.