சென்னை,ஆகஸ்டு 4- தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்,தேமுதிக, காங்கிரஸ், பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதற்கு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் முதலான வணிகப் பெருமக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, கன்னியாகுமரி, நாகர்கோவில் முதலான முக்கிய ஊர்களில் ஒரு சில கடைகளைத் தவிர மற்ற எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
அதனால் முக்கிய நகரங்கள் எல்லாம் மக்கள் நடமாட்டம் அதிகமின்றி வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன.
கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து, ஆட்டோ, டாக்ஸி முதலான போக்குவரத்து வாகனங்களுக்குத் தடையில்லை. அவை வழக்கம் போல் ஓடின. அதனால்,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.
எனினும், அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்னும் முன்னெச்சரிக்கை காரணமாகப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடை வீதிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், டாஸ்மாக் மதுக்கடைகளிலும் பாதுகாப்புக்காகக் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை வாகனங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் ரோந்தும் சுற்றி வருகின்றனர்.