இஸ்லாமாபாத்,ஆகஸ்டு4- சென்ற வாரம் பாகிஸ்தான் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் லஸ்கர் –இ–ஜாங்கி இயக்கத் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் காரால் மோதிக் கொலை செய்ய நடந்த முயற்சியிலிருந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அவர் தன் குடும்பத்தினருடன் பஞ்சாப்பிலிருந்து இஸ்லாமாபாத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது,திடீரென ஒரு திருப்பத்திலிருந்து அசுர வேகத்தில் வந்த கார், நவாஸ் ஷெரீப்பின் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பாக வந்து கொண்டிருந்த கார்களை எல்லாம் இடித்துத் தள்ளிக் கொண்டு வந்து, நவாஸ் ஷெரீப்பின் கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நவாஸ்ஷெரீப்பின் கார் பலத்த சேதமடைந்த போதும், நவாஸ்ஷெரீப்பும் அவருடைய குடும்பத்தினரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
உடனே பாதுகாவலர்கள் விபத்துக்குள்ளாக்கிய கார் ஓட்டுநரை மடக்கிப் பிடித்தனர். அவன் ஓட்டி வந்த காரைச் சோதனை செய்த போது காரின் பதிவு எண் போலியானது என்பது தெரிய வந்தது.
மேலும், அந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில் அவன் தவறுதலாக மோதவில்லை. நவாஸ்ஷெரீப்பைக் கொல்லும் நோக்கத்திலேயே மோதியுள்ளான் என்பது தெரிந்தது.