சென்னை, ஆகஸ்டு 4- சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த மதுக்கடையை அடித்து நொறுக்கினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் காவல்துறையினர் அவர்களைத் தடியடி நடத்திக் கலைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய தடியடியில் பல மாணவர்கள் காயமுற்றனர்; பல மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
மேலும்,மதுக்கடை மீது தாக்குதல் நடத்திய மாணவர்களில் 15 பேரைக் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை முக.ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டிய மு.க.ஸ்டாலின், மதுவை எதிர்த்து மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தும் புழல் சிறையிலுள்ள மாணவர்களைச் சந்தித்து, மாணவர் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.