சென்னை, ஆகஸ்டு 4- தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரித்து வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’ என்னும் படம், இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 71 வருட வரலாற்றில் வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப்பிரிவில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை ‘விசாரணை’ படம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரித்து மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்துக்கு இரண்டு தேசிய விருதும் பல சர்வதேச விருதுகளும் கிடைத்தன.
அதனைத்தொடர்ந்து, தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி உருவாக்கிய ‘விசாரணை’ என்ற படத்திற்கும் விருது கிடைக்கும் முகாந்திரம் உள்ளதால் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளனர்.
தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி தொடர்ந்து வெற்றி பெறுவதோடு விருதுகளையும் வாங்கிக் குவிப்பது திரையுலகினர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காக்காய் முட்டை படத்திற்கு முன் இருவரும் இணைந்த ஆடுகளம் படமும் தேசிய விருதுபெற்றது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
தனுஷ்- வெற்றிமாறன் இருவரும் சேர்ந்து என்ன மாயம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. வெற்றித் தேவதை அவர்களின் வாசலில் வந்து தவம் கிடக்கிறாள்.
கண்ணுபடப் போகிறது தனுஷ்- வெற்றிமாறன்!