இலண்டன் – இலண்டனில் வசிக்கும் ‘சரவாக் ரிப்போர்ட்’ ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு காவல்துறையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இலண்டனிலிருந்து வெளிவரும் ‘த இண்டிபென்டென்ட் நாளேடு’ செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஹைட் பூங்காவில் இருந்தபோது அவர் மர்ம நபர்கள் சிலரால் பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுனின் மைத்துனியான கிளேர் பிரவுன், மலேசியாவைச் சேர்ந்த ஒருவரை நேரில் சந்தித்து பேசி தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது அவரை யாரோ புகைப்படம் எடுத்ததுடன், தீவிரமாக கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.
“காவல்துறையில் அளித்த புகாரில் நான் பின் தொடரப்பட்டு, கண்காணிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளேன்,” என்று கிளேர் கூறியதாக ‘த இண்டிபென்டென்ட் நாளேடு’ செய்தி தெரிவிக்கிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக கிளேர் மீது மலேசியாவில் வழக்குப் பதிவானதையடுத்து, அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) தமது பதவியிலிருந்து நீக்கப்படும் முன்னர், பிரதமர் நஜிப்புக்கு எதிராக கைது ஆணையை பிறப்பிப்பதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்ததாக சரவாக் ரிப்போர்ட் இணையதளத்தில் செய்தி வெளியானது.
இந்நிலையில் புதன்கிழமையன்று கிளேருக்கு எதிரான கைது ஆணையை மலேசிய காவல்துறை பெற்றது. இதையடுத்து, அனைத்துலக காவல்துறை அமைப்பான இண்டர்போலின் ரெட் நோட்டீஸ் பட்டியலில் அவரது பெயரைச் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.