சென்னை, ஆகஸ்ட் 6 – “பாஜக-வுடன் கூட்டணி என்று நீங்கள் தான் சொல்லுகிறீர்கள். தற்போது நான், எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கடந்தாண்டு நடந்த மக்களைவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, அதனைத் தொடர்ந்து நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் பாஜக-வுடன் களமிறங்கியது. எனினும், கடைசி வரை அக்கட்சி வேட்பாளருக்கு எத்தகைய ஆதரவும் தெரிவிக்கவில்லை. இதனால் அப்போது முதலே, பாஜக கூட்டணியில் தேமுதிக இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.
அதன் பின்னர் நடந்த, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன் தமிழிசை – விஜயகாந்த சந்திப்பு மூலம் பாஜக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து இருப்பது உறுதியானது.
இந்நிலையில் தான், இன்று விஜயகாந்த் தங்கள் கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நாளை பிரதமர் மோடி, தமிழகம் வர உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத்தலைவர் இளங்கோவன், கறுப்புக் கொடி காட்ட இருப்பதற்கும் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த புதிய கூட்டணி, 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.