சென்னை, ஆகஸ்ட் 7- இந்தியா மற்றும் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ள தமிழ்ப்படம் சண்டிவீரன்.
இப்படத்தை இயக்குநர் பாலா தயாரித்திருக்கிறார். ‘களவாணி’ படத்தின் மூலம் புகழ் பெற்று, ‘வாகை சூடவா’ படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம் இயக்கியிருக்கிறார்.
அதர்வா நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் இரு கிராமங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
இயக்குநர் பாலா தயாரித்திருக்கும் படம் என்பதால் கண்டிப்பாக நல்ல கதையம்சமுள்ள படமாகத் தான் இருக்கும் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், இந்தப் படத்தைச் சிங்கப்பூரில் வெளியிட, சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது.
சிங்கப்பூர் அரசு இப்படத்தைத் தடை செய்ய என்ன காரணமென்றால், இதில் சிங்கப்பூரில் அரசாங்கம் வழங்கும் அனுமதிக் காலத்திற்கும் கூடுதலாக சட்டவிரோதமாகத் தங்கி விடுபவர்களுக்கு வழங்கப்படும் ‘ரோத்தான்’ என்ற பிரம்படி தண்டனையை சித்தரித்துச் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாலேயே சண்டிவீரன் படத்தை வெளியிட சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் இயக்குநர் பாலாவும், சற்குணமும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
“இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது” என சண்டிவீரன் படத்தின் இயக்குனர் சற்குணம் கருத்துத் தெரிவித்துள்ளார்.