Home கலை உலகம் “வர்மா” மீண்டும் எடுக்கப்படுகிறது – இயக்குநர் பாலாவும் மாற்றப்படுகிறார்

“வர்மா” மீண்டும் எடுக்கப்படுகிறது – இயக்குநர் பாலாவும் மாற்றப்படுகிறார்

1355
0
SHARE
Ad

சென்னை – இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அதிசயமாக, மிகவும் எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட, ‘வர்மா’ திரைப்படம் அப்படியே கைவிடப்பட்டு, மீண்டும் புதிய இயக்குநரை வைத்து எடுக்கப்படவிருக்கிறது.

தெலுங்கில் வெளிவந்து வெற்றிக் கொடி நாட்டிய படம் ‘அர்ஜூன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பை எடுக்க முன்வந்த இ4 எண்டெர்டெயிண்ட்மெண்ட் (E4 Entertainment) நிறுவனம் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் பாலாவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. முதல் காப்பி என்ற அடிப்படையில் அந்தப் படத்தை எடுத்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றார் பாலா.

(முதல் காப்பி என்றால் என்ன? ஒரு படத்திற்கான முழு செலவையும் ஓர் இயக்குநரிடம் தயாரிப்பாளர் முழுமையாகக் கொடுத்துவிட, அதைத் தொடர்ந்து, அந்தப் படத்திற்கான நடிக, நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரைக்கதை இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு, முழுமையாக எடுக்கப்பட்ட படத்தின் ஒரு பிரதியை அதாவது முழுமையாக எடுத்து முடிக்கப்பட்ட படத்தின் முதல் பிரதியை தயாரிப்பாளரிடம் கொடுப்பார். பின்னர் அந்தப் படத்திற்குத் தேவையான விளம்பரம், வெளியீட்டு செலவுகள், என எல்லா செலவுகளையும் செய்து அந்தப் படத்தை தயாரிப்பாளர் வெளியிடுவார்)

#TamilSchoolmychoice

ஆனால் ‘வர்மா’ படம் குறித்து அதன் தயாரிப்பு நிறுவனமான இ4 எண்டெர்டெயிண்ட்மெண்ட் இன்று வெளியிட்ட அறிக்கையில், இயக்குநர் பாலா முதல் பிரதி அடிப்படையில் எடுத்துக் கொடுத்த ‘வர்மா’ படத்தின் உள்ளடக்கமும், படத்தின் வடிவமும் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், அதன் காரணமாக அந்தப் படத்தை அப்படியே நிறுத்தி விட்டு, ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தழுவலை மீண்டும் முழுமையாக அதே துருவ் கதாநாயகனாக நடிக்க மீண்டும் எடுக்கவிருப்பதாகவும், ஆனால், இயக்குநர் பாலாவுக்கு பதிலாக வேறொரு இயக்குநர் அந்தப் படத்தை இயக்குவார் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால், தங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றாலும்,  அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் அசல் தன்மையும், சிறப்பும் தமிழ்ப் படத்திலும் இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முடிவைத் தாங்கள் எடுத்திருப்பதாகவும், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் புதிய தமிழ்ப் பதிப்பை வெளியிடத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலா போன்ற மிகச் சிறந்த இயக்குநரின் இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்திற்கே – அதுவும் படத்தின் முன்னோட்டம் கூட வெளியிடப்பட்டு விட்ட நிலையில் – இத்தகையை நிலைமை ஏற்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகில் பரபரப்பாக தற்போது பேசப்படுகிறது.